Ads 468x60px

நூற் பிரிவுகள்

நூற் பிரிவுகள்
திருக்குறள் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட எண்ணிக்கையான அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது.ஆனால், குறளின் அதிகாரங்கள் ஊன் 10 குறள்களைக் கொண்டுள்ளன என்பதற்கான விளக்கத்தினை இன்றைய ஆய்வாளர்கள் அறியவில்லை.

திருக்குறளில் "பாயிரம்" என்னும் இயலில் நான்கு அதிகாரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் முதலாவது , "கடவுள் வாழ்த்து" என்னும் அதிகாரம். அதைத்தொடர்ந்து, "வான் சிறப்பு", "நீத்தார் பெருமை", "அறன் வலியுறுத்தல்" ஆகிய அதிகாரங்கள்.

அறத்துப்பால்
திருக்குறளின் அறத்துப்பாலில் பாயிரவியலைத் தொடர்ந்து முதலாவதாக 20 அதிகாரங்களுடன் "இல்லறவியல்" அடுத்து 13 அதிகாரங்ள் கொண்ட துறவறவியல் இறுதியில் "ஊழ்" என்னும் ஒரே அதிகாரம் கொண்ட "ஊழியல்" என வகைபடுத்தப் பட்டுள்ளது. திருக்குறளில் ஒரே ஒரு அதிகாரம் உடைய இயல் "ஊழியல்" மட்டுமே. முதற்பாலாகிய அறத்துப்பாலில் மொத்தம் 38 அதிகாரங்கள்.

பொருட்பால்
அடுத்து வரும் பொருட்பாலில் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களுமாக மொத்தம் 70 அதிகாரங்கள் உள்ளன.

காமத்துப்பால்
கடைசிப்பாலாகிய "இன்பத்துப்பால்" அல்லது "காமத்துப்பாலில்" களவியல் மற்றும் கற்பியல் என இரண்டு இயல்கள். களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களுமாக மொத்தம் 25 அதிகாரங்கள் உள்ளன. ஆகமொத்தம் 9 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள். திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் திருவள்ளுவர் பாடியுள்ளார்.

திருக்குறள் நூலமைப்பைப் பொறுத்தமட்டில், அது மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. பாயிரத்தில் வைக்கப்பட்டுள்ள நான்கு அதிகாரங்களுள் கடவுள் வாழ்த்து, அறன் வலியுறுத்தல், நீத்தார் பெருமை என்பவை மக்களின் முழு கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதாகவும், வான் சிறப்பு மட்டும் மக்களின் முழு கட்டுப்பாட்டிற்கு அப்பாற்ப்பட்டதாகவும் உள்ளது.

திருக்குறளும் எண் குறித்த தகவல்களும்
திருக்குறளின் மூன்று பால்களும், ஒவ்வொன்றிலும் 34 (பாயிரவியல் நீக்கி) , 70, 25 என்ற எண்ணிக்கையான அதிகாரங்கள் உள்ளதாக அமைக்கப்பட்டு, அந்த எண்களின் இலக்கங்களைக் கூட்டினால் 7 என்ற கூட்டெண் வரும் விதத்திலும் நூல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒட்டு மொத்த அதிகாரங்களான 133 இன் எண்களைக் கூட்டினாலும், கூட்டெண் 7ஆக வரும் விதத்திலேயே நூல் அமைக்கப்பட்டு்ள்ளது. ஒட்டு மொத்தத்தில், திருக்குறளின் நூலமைப்பானது 7 என்ற எண்ணுக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், திருக்குறளின் நூலமைப்பானது 3, 4, 9, 10 என்ற எண்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தே அமைக்கப்பட்டுள்ளது. இவை தற்செயலாக நடைபெற்றதா? இல்லையா? என்பது பற்றியும், இவ்வெண்கள் எங்கேனும் தமிழரின் வாழ்வியலில் நெறிமுறைகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளனவா? இல்லையா? என்பது பற்றியும், இந்த எண்கள் ஒரு குறிப்பிட்ட போதனையில் முக்கியத்துவம் பெறுவதாக இருந்தால், அது எது என்பதையும் இன்றுவரை ஆய்வாளர்கள் ஆராய்ந்து, எதனையும் கூறவில்லை.

மற்றைய புறத்தில், திருக்குறளின் ஆரம்பத்தில் வைக்கப்பட்டுள்ள நான்கு அதிகாரங்களும் என்ன அடிப்படையில் வைக்கப்பட்டுள்ளன, அவைகள் ஏதாவது போதனை அடிப்படையில்தான் வைக்கப்பட்டுள்ளனவா, இல்லையா என்பது பற்றியும் ஆய்வாளர்களால் ஆராயப்பட்டு, சரியான முடிவுக்கு வரப்படவில்லை.