Ads 468x60px

பழந்தமிழ் நூல்வரிசையில் திருக்குறள்

பழந்தமிழ் நூல்வரிசையில் திருக்குறள்

1. எட்டுத்தொகை,பத்துப்பாட்டு ஆகியவை அடங்கிய பதினெண் மேற்கணக்கு.
2. பதினெண்கீழ்க்கணக்கு.
3. ஐம்பெருங்காப்பியங்கள்.
4. ஐஞ்சிறு காப்பியங்கள்.
இவற்றில், பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு திருக்குறள் விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது. இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. அக்காலத்தில் இவ்வகை வெண்பாக்களால் ஆகிய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.

குறள் பெயர் வரலாறு.
திருவள்ளுவர் என்பவர் தமது வாழ்க்கையில் அனுபவித்துணர்ந்து அவ்வப்போது ஒலைச்சுவடிகளில் டைரி போல் குறிப்பெடுத்து வைத்த சில பட்டறிவு யதார்த்த நிகழ்வுகளை மணக்குடவர் என்பவர் தொகுத்து எழுதியுள்ளார். கிராமங்களில் இருக்கும் வீட்டு ஒட்டுத் திண்ணைகள் அல்லது மேடை மேல் வந்து அமர்ந்து கேட்பவரை நோக்கி அவருக்கு நடக்க வேண்டியதை குறித்து சொல்பவர்களை குறி சொல்பவர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் சிலர் மந்திர தந்திர மாயாஜால வித்தைகளையும் கற்று வேடிக்கை செய்து காட்டி பிழைத்து வந்தவர்களாக இருந்ததால் மக்கள் அவர்களை குறளி வித்தை காட்டிகள் என்று அழைத்தனர். வள்ளுவர் குறளிகள் இனத்தவர் என்பதை இச்செய்தி மூலம் அறியலாம். இப்படி ஒரு இனத்தினர் அந்த நாளில் இருந்துள்ளனர் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. குறளி இனத்தில் இருந்து வந்தவர் எழுதியதால் குறளி என்ற வார்த்தை மருவி குறளாகி விட்டது. ஒன்றரை வரிகளில் குறுகி எழுதப்பட்டதால் உரை எழுத அதனை ஆய்ந்தவர்கள் திரு என்ற வார்த்தையை அதன் முன்னால் சேர்த்து “திரு குறள்” என அழைத்தார்கள்.

நூல் அமைப்பு.
"பாயிரம்" என்னும் பகுதியுடன் முதலில் "அறத்துப்பால்" வருகிறது. அதிலும் முதலில் காணப்படுவது , "கடவுள் வாழ்த்து" என்னும் அதிகாரம். தொடர்ந்து, "வான் சிறப்பு", "நீத்தார் பெருமை", "அறன் வலியுறுத்தல்" ஆகிய அதிகாரங்கள். அடுத்துவரும் "இல்லறவியல்" என்னும் இயலில் 25 அதிகாரங்கள்; அடுத்துள்ள துறவறவியலில் 13 அதிகாரங்களுடன் முதற்பாலாகிய அறத்துப்பால் பகுதி முடிவுறுகிறது.

அடுத்து வரும் பொருட்பாலில் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களும் உள்ளன.

கடைசிப்பாலாகிய "இன்பத்துப்பால்" அல்லது "காமத்துப்பாலி"ல் இரண்டு இயல்கள்; களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களும் உள்ளன. ஆகமொத்தம் 7 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள். திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் திருவள்ளுவர் பாடியுள்ளார். ஆனால் இவற்றில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.

"அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு...."

என்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய "அ" வில் ஆரம்பித்து, 1330 ஆம் குறளாகிய,

"ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப்பெறின்"
என்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய "ன்" னுடன் முடித்திருக்கிறார் திருவள்ளுவர்.

திருக்குறளின் பால்களும், இயல்களும், அதிகாரங்களும்.
திருக்குறளின் 1330 குறள்களும் மூன்று பால்களின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன. அவை,

அறத்துப்பால்
பாயிரம்
இல்லறவியல்
துறவறவியல்
ஊழியல்

பொருட்பால்
அரசியல்
அமைச்சியல்
அரணியல்
கூழியல்
படையியல்
நட்பியல்
குடியியல்

காமத்துப்பால்
களவியல்
கற்பியல்

திருவள்ளுவர் எழுதியதாகக் கருதப்படும் நூல்கள்.
1. ஞானவெட்டியான் - 1500 பாக்கள்
2. திருக்குறள் - 1330 பாக்கள்
3. ரத்தினசிந்தாமணி - 800 பாக்கள்
4. பஞ்சரத்தனம் - 500 பாக்கள்
5. கற்பம் - 300 பாக்கள்
6. நாதாந்த சாரம் - 100 பாக்கள்
7. நாதாந்த திறவுகோல - 100 பாக்கள்
8. வைத்திய சூஸ்திரம் - 100 பாக்கள்
9. கற்ப குருநூல் - 50 பாக்கள்
10. முப்பு சூஸ்திரம் - 30 பாக்கள்
11. வாத சூஸ்திரம் - 16 பாக்கள்
12. முப்புக்குரு - 11 பாக்கள்
13. கவுன மணி - 100 பாக்கள்
14. ஏணி ஏற்றம் - 100 பாக்கள்
15. குருநூல் - 51 பாக்கள்