Ads 468x60px

பிற்கால நீதிநூல்கள்

பிற்கால நீதிநூல்கள்

தொல்காப்பியர் காஞ்சித் திணையிலும் பாடாண் திணையிலும் கூறிய பல துறைகள் நீதிகளாகவும் தத்துவங்களாகவும் கிளைவிட வழிவகுத்தன. சங்க இலக்கியத்தில் பல பாடல்களில் சிறந்த அறிவுரைகள் இடம் பெறுகின்றன. இவ்வேர்களிலிருந்து கிளைத்து வளர்ந்தனவே பிற்கால நீதிநூல்கள்.
தமிழில் நீதிநூல் வகைமை வளர்ச்சி, அருமையும் எளிமையும் உடையதாகும். நீதிநூல் சட்டப் புத்தகம்போல் சோர்வு தரும் வகையில் அமையாமல் ஏனைய இலக்கியங்களுடன் போட்டியிடுமளவிற்குச் சுவையுணர்வோடும் உத்திகளோடும் படைக்கப்பட்டுள்ளது. இலக்கிய வகைமை என்ற பார்வையில் நோக்கும்பொழுது அவை முழுவதும் நீதி இலக்கியமாகவே உள்ளன.

ஒளவையார் நூல்கள்

சங்க காலத்தும் அதற்குப் பிறகும் வாழ்ந்த ஒளவையார் பலரென்பர் ஆராய்ச்சியாளர். அவர்களுள் நீதி நூல்களைப் பாடிய சோழர் கால ஒளவை கி.பி.12-ஆம் நூற்றாண்டினர் என்பர் அறிஞர் மு.அருணாசலம். ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை அல்லது வாக்குண்டாம், நல்வழி ஆகிய நான்கும் இவரால் பாடப்பட்டனவாகும்.

ஆத்திசூடி
முதற் சொல்லால் பெற்ற பெயர் இதுவாகும். முதற்பாடலான கடவுள் வாழ்த்து,

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி யேத்தித் தொழுவோம் யாமே

என்பதாகும். இந்நூலில் 109 பாக்கள் உள்ளன. இவை உயிரும் உயிர்மெய்யுமாகிய தமிழ் எழுத்துகளை நிரலே (வரிசையாக) முதல் எழுத்துகளாக வைத்து எழுதப்பட்டவை ஆகும். நினைவில் வைத்துக்கொள்ள எளிமையானவை. மாணவர்களுக்குப் போதிப்பதற்கு ஏற்புடையவை. “மிகச் சுருங்கிய சொற்களால் உலகிற்குப் பொதுவான நீதிகளை இவ்வளவு அதிகமாகச் சொன்ன நூல் வேறு எதுவும் இல்லை” என்பார் மு.அருணாசலம்.

அறஞ்செய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்

என இவ்வாறு சொல்லும் அழகு சுருங்கச்சொல்லி விளங்க வைத்தலுக்கு எடுத்துக்காட்டாகும்.

கொன்றை வேந்தன்
இதுவும் முதல் தொடரால் பெற்ற பெயர்.

கொன்றை வேந்தன் செல்வன் அடியிணை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே

என்பது கடவுள் வாழ்த்து. மொழிக்கு முதலாம் எழுத்துகளால் அகர வரிசைப்படுத்தி நினைவில் தங்குமாறு ஆத்திசூடி எழுதப்பட்டுள்ளது. எதுகையை அடிப்படையாக வைத்து நினைவூட்டும் வகையில் திறம்பட யாக்கப்பட்டதே கொன்றைவேந்தன். இதுவும் மொழி முதலாகும் எழுத்துகளின் அகர வரிசையில் நிரல்பட உள்ளது.

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
இல்லறம் அல்லது நல்லறம் அன்று
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்

இவ்வாறு நினைவில் கொள்ளத்தக்க, பெரிதும் பயன்படக் கூடிய அறிவுரைகளைப் பசுமரத்தாணிபோல் பதியுமாறு கூறுமழகு காண்க.

மூதுரையும் நல்வழியும்
மூதுரை (வாக்குண்டாம்) கடவுள் வாழ்த்துடன் 31 வெண்பாக்களையும் நல்வழி 41 வெண்பாக்களையும் உடையனவாகும்.

நல்லாரை காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே (8)

என்பது மூதுரை வாக்கு.

பசியினால் ஏற்படும் கேட்டினை ஒளவையார் விளக்கிக் கூறும் திறம் யாராலும் மறக்க வொண்ணாதது.

மானம் குலம்கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம்உயர்ச்சி தாளாண்மை தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்தி டப்பறந்து போம். (நல்வழி, 26)

நல்வழி அறியாதார் கூடப் ‘பசி வந்திடப் பத்தும் பறக்கும்’ என்று பழமொழிபோல் பேசுவதைக் காணலாம்.

பிற நூல்கள்
அருங்கலச் செப்பு, அறநெறிச்சாரம், வெற்றிவேற்கை, நீதிநெறி விளக்கம், நன்னெறி, உலகநீதி போன்ற நூற்களும் பிற்காலத்தில் தோன்றின.

அருங்கலச் செப்பு
12-ஆம் நூற்றாண்டில் தோன்றிய அருங்கலச் செப்பு என்ற நீதிநூல் சமண சமய அறிவுரைகளைக் கூறுகிறது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இது வடநூலொன்றின் வழிநூல் என்பர். 180 குறள் வெண்பாக்களை கொண்ட நூல் இது. திருக்குறளைப் பின்பற்றும் இந்நூலாசிரியர் பலவிடங்களிலும் திருக்குறள் கருத்தை எடுத்தாள்கிறார். ஓரிடத்தில் “காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றின் நாமம் கெடக் கெடும்நோய்” என்ற குறளையே எடுத்தாள்கிறார்.

அறநெறிச்சாரம்
இதன் ஆசிரியர் முனைப்பாடியார்; சமணர். பொதுநீதிகளை மிகுதியாகவும் சமண சமயச் சிறப்பொழுக்கங்களைக் குறைவாகவும் கூறுகிறார். கடவுள் வாழ்த்துடன் 226 வெண்பாக்கள் இதிலுள்ளன.

வெற்றிவேற்கை
அதிவீரராம பாண்டியர் இயற்றிய நீதிநூல், முதல் தொடரால் வெற்றிவேற்கை எனப்பட்டது. இந்நூலில் 82 அறிவுரைகள் உள்ளன. இது ‘கொன்றைவேந்தனை’ப் போன்ற அடியமைப்பு உடையது. சிற்சில மட்டுமே ஒன்றற்கு மேற்பட்ட அடிகளைப் பெற்று வருகின்றன.

எழுத்தறிவித்தன் இறைவன் ஆகும்
மந்திரிக்கழகு வரும்பொருள் உரைத்தல்
தேம்படு பனையின் திரள்பழத்து ஒருவிதை
வானுற ஓங்கி வளம்பெற வளரினும்
ஒருவர்க் கிருக்க நிழலாகாதே

என்பன போன்ற பொருளாழமுடைய அழகிய எளிமை மிகுந்த தொடர்களை வெற்றிவேற்கையில் காணலாம்.

நீதிநெறி விளக்கம்
குமரகுருபரரின் இந்நூல் 101 வெண்பாக்களைப் பெற்றுள்ளது. இவ்வெண்பாக்கள் சுவை மிகுந்தது; ஓரிருமுறை படித்தாலே மனத்தில் பதிவன. குமரகுருபரர் பல பிள்ளைத்தமிழ் இலக்கியங்களையும் மீனாட்சியம்மை குறம், கந்தர் கலிவெண்பா முதலிய இலக்கியங்களையும் எழுதியவர். நீதிநூலும் இயற்ற விரும்பி இதனைச் செய்தார் என்பர்.

நீதிநெறி விளக்கத்தில் ஒரு பாடல் (6) நான்முகனும் புலவர்க்கு ஒப்பாகான் என்பதை வலியுறுத்துகிறது. அவன் உருவாக்கிய உடம்பு அழியும்; ஆனால் புலவர் இயற்றும் பாடல் என்றும் வாழும் என்னும் கருத்தைத் தாங்கியதாகும் அது.

நன்னெறி
சிவப்பிரகாசரின் நன்னெறி 40 வெண்பாக்களை உடையது. பல்வேறு நீதிகளைப் புகட்டும் இந்நூல் இனிமையானது. ஒரு பாடல் வெகுளியை அடக்குக என்கிறது.

உள்ளம் கவர்ந்தெழுந்து ஓங்கு சினம்காத்துக்
கொள்ளும் குணமே குணமென்க; - வெள்ளம்
தடுத்தல் அரிதோ? தடங்கரைதான் பேர்த்து
விடுத்தல் அரிதோ விளம்பு (8)

என்பது அப்பாடல்.

17-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகும் நீதி நூல்கள் தோன்றின. நடை எளிமை மிகுந்தவையாக அவை விளங்கின.

உலக நீதி
உலகநாதர் 13 விருத்தங்களில் உலகியல் சார்ந்த நீதிகளை உலகநீதி என்னும் தம் நூலில் உரைக்கின்றார். ஒவ்வொரு பாட்டும் முருகனை வாழ்த்தி முடிதல் இதன் தனிச்சிறப்பாகும்.

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

இந்த அமைப்பில் நூல் முழுவதும் அமைந்துள்ளது. உலகநாத பண்டிதர் மிக எளிய சொற்களில், சாதாரண மக்களுக்கு என நீதிகளை வழங்கியிருக்கிறார்.

சில சதகங்களும் நீதி போதிக்கப் பிறந்தன. கைலாசநாதர் சதகம், அறப்பளீசுர சதகம், குமரேச சதகம் போன்றவற்றில் இப்பாங்கைக் காணலாம். 18-ஆம் நூற்றாண்டில் சிவஞானமுனிவர் சோமேசர் முதுமொழி வெண்பா எழுதித் திருக்குறளுக்கு ஏற்ற கதைகளை இணைத்துள்ளனர்.

இருபதாம் நூற்றாண்டு நூல்கள்

மாயூரம் வேதநாயகம் பிள்ளை, பாரதியார், பாரதிதாசன் போன்றோரின் அறிவுரைகளை இக்கால வளர்ச்சியாக மதிப்பிடலாம். பாரதியின் புதிய ஆத்திசூடியில் ஒளவையாரின் நீதிகளுக்கு மாறாக, இக்காலத்திற்கு ஏற்பக் கூறப்படும் புரட்சிக்குரல்கள் பலவுள்ளன. விடுதலை இயக்கக் காலத்தின் எதிரொலியை அதில் கேட்கலாம்.

ஊண் மிக விரும்பு
கிளைபல தாங்கேல்
சோதிடந்தனை யிகழ்
தையலை உயர்வு செய்
பணத்தினைப் பெருக்கு
போர்த்தொழில் பழகு
வெடிப்புறப் பேசு

என்றிவ்வாறு ஊக்கத்தோடும் உணர்வோடும் பாரதியாரின் ஆத்திசூடி வெளிப்படுகிறது.

தமிழில் நீதிநூல்கள் இவ்வாறு காலந்தோறும் வளர்ந்து, ஒரு தனியிடத்தைப் பெற்றுள்ளன. ஒரு குறிப்பிட்ட காலத்தை நாம் நீதிநூல்கள் பெருகிய காலம் என அக்காலச் சமுதாய உணர்வு பற்றிக் கூறினாலும் தமிழ் நூற் பரப்பு முழுவதுமே இவ்வறம் - நீதி - ஊடுருவி நிற்கவே செய்கிறது எனலாம். எவ்வகை நூலாயினும் பொருளிலும் புனைதிறனிலும் அறநூற்போக்குப் போற்றப்பட்டது. இவை அனைத்தும் நீதி இலக்கிய வகைமை என்னும் பிரிவில் அடங்கக் காணலாம்.