Ads 468x60px

சூனிய காலமறிதல் - ஞானக் குறள்

நிரவி யழலுருவாய் நீண்ட வெளிகாணில்
அரவணை யானாகு முடம்பு.
241

உருவந் தழலாக வுள்ளத்தே சென்று
புருவத் திடையிருந்து பார்.
242

புருவத் திடையிருந்து புண்ணியனைக் காணில்
உருவற்று நிற்கு முடம்பு.
243

அகம்புறம் பேராப் பொருளை யறியில்
உகம்பல காட்டும் உடம்பு.
244

ஆவிபாழ் போகா தடக்கி யிருந்தபின்
ஓவிய மாகு முடம்பு.
245

அஞ்சு மடக்கி யறிவோ டிருந்தபின்
துஞ்சுவ தில்லை யுடம்பு.
246

தீயாக வுள்ளே தெளிவுற நோக்கினால்
மாயாது பின்னை யுடம்பு.
247

தானந்த மின்றித் தழலுற நோக்கிடில்
ஆனந்த மாகு முடம்பு.
248

ஒழிவின்றி நின்ற பொருளை யுணரில்
அழிவின்றி நிற்கு முடம்பு.
249

பற்றற்று நின்ற பழம்பொருளைச் சிந்திக்கில்
முற்று மழியா துடம்பு.

250