Ads 468x60px

திருவள்ளுவர் - வரலாறு

திருவள்ளுவர் - வரலாறு
‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று தொடங்கி, ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் ‘திருக்குறள்’ என்னும் உன்னதப் படைப்பில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், திருவள்ளுவர். உலகளாவிய தத்துவங்களைக் கொண்ட திருக்குறளைப் படைத்து, உலக இலக்கிய அரங்கில் தமிழ்மொழிக்கென்று ஓர் உயர்ந்த இடத்தை நிலைப்பெற செய்தவர். இவர் உலக மக்களால், ‘தெய்வப்புலவர்’, ‘பொய்யில் புலவர்’, ‘நாயனார்’, ‘தேவர்’, ‘செந்நாப்போதர்’, ‘பெருநாவலர்’, ‘பொய்யாமொழிப் புலவர்’ என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

அவர் எழுதிய திருக்குறள், வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் இனம், மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால், திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக ‘உலகப் பொது மறை’, ‘முப்பால்’, ‘ஈரடி நூல்’, ‘உத்தரவேதம்’, ‘தெய்வநூல்’, ‘பொதுமறை’, ‘பொய்யாமொழி’, ‘வாயுறை வாழ்த்து’, ‘தமிழ் மறை’, ‘திருவள்ளுவம்’ போன்ற பல பெயர்களால் சிறப்பித்து அழைக்கின்றனர்.

வாழ்ந்த காலம்: 2 ஆம் நூறாண்டு முதல் 8 நூற்றாண்டு வரையிலான இடைப்பட்ட காலம்

பிறப்பு:
திருவள்ளுவர் அவர்களின் பிறப்பு மற்றும் பிறப்பிடத்திற்கான சரியான சான்றுகள் இல்லை என்று தான் கூறவேண்டும். ஏனென்றால், அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார் என்றும், மதுரையில் பிறந்ததாகவும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்ததாகவும் சிலரும் கூறுகின்றனர். வேறு சிலர், அவர் கன்னியாகுமரி மாவட்டம் திருநயினார்குறிச்சி என்ற ஊரில் பிறந்தவர் என்றும் கூறுவர். மேலும், அவர் ஆதி – பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் சொல்கின்றனர். ஆனால், இதுவரை இவை எதுவுமே உறுதிப்படவில்லை.

மேலும் சிலர், அவர் ஒரு கிறித்துவர் என்றும், சமண மதத்தவர் என்றும் பவுத்தர் என்றெல்லாம் கூட பொய்யானத் தகவல்களைப் பரிமாறுகின்றனர்.