நினைவுச் சின்னங்கள்
இந்தியாவின் தென் கோடியில் அமைந்துள்ள முக்கடல் சங்கமிக்கும் இடமான கன்னியாகுமரியில், அவரின் புகழைப் பறைசாற்றும் விதமாக அவருக்கென்று ஒரு பிரம்மாண்டமான சிலை ஒன்று தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ளது. 133 அடி உயரமுள்ள இச்சிலை, 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைந்துள்ளது. இதனை அமைக்க 10 ஆண்டுகள் தேவைப்பட்டது என இதை வடிவமைத்த சிற்பி கணேசன் கூறியுள்ளார். மேலும், சிலையின் உட்புறச் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன.
அவர் நினைவாக, சென்னையில் ‘வள்ளுவர் கோட்டம்’ ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவர் இயற்றிய திருக்குறளின் 1330 குறள்களும், இங்குள்ள குரல் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
லண்டனிலுள்ள ரஸ்ஸல் ஸ்கொயரில் இருக்கும் ‘ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் மற்றும் ஆப்ரிக்கன் ஸ்டடீஸ்’ என்னும் கல்வி நிறுவனத்தில், அவரது திருவுருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் மறைந்தாலும், அவர் படைத்த திருக்குறள் என்னும் உன்னத நூல், எக்கால மனிதர்களுக்கு ஓர் வழிகாட்டியாக இருந்து தமிழர்களின் புகழையும் உலகளவில் ஓங்கச் செய்கிறது.