Ads 468x60px

அருள் பெறுதல் - ஞானக் குறள்

அருளினா லன்றி யகத்தறி வில்லை
அருளின் மலமறுக்க லாம்.
101

இருளைக் கடிந்தின் றிறைவ னருளால்
தெருளும் சிவசிந்தை யால்.
102

வாய்மையாற் பொய்யா மனத்தினால் மாசற்ற
தூய்மையா மீச னருள்.
103

ஒவ்வகத்து ணின்ற சிவனருள் பெற்றக்கால்
அவ்வகத்து ளானந்த மாம்.
104

உன்னுங் கரும முடிக்கலா மொள்ளிதாய்
மன்னுமருள் பெற்றக் கால்.
105

எல்லாப் பொருளு முடிக்கலா மீசன்றன்
தொல்லையருள் பெற்றக் கால்.
106

சிந்தையு ணின்ற சிவனருள் பெற்றக்கால்
பந்தமாம் பாச மறும்.
107

மாசற்ற கொள்கை மதிபோலத்தான் றோன்றும்
ஈசனருள் பெற்றக் கால்.
108

ஆவாவென் றோதியருள் பெற்றார்க் கல்லாது
தாவாதோ ஞான ஒளி.
109

ஓவாச் சிவனருள் பெற்றா லுரையின்றித்
தாவாத வின்பந் தரும்.
110